தெருநாய்களுக்கு உணவு கொடுக்கும் கல்லூரி மாணவிகள் ,..தன்னை ஒருசிலர் ஏளனம் செய்து வருகின்றனர் என வருத்தம்.! 

தெருநாய்களுக்கு உணவு கொடுக்கும் கல்லூரி மாணவிகள் ,..தன்னை ஒருசிலர் ஏளனம் செய்து வருகின்றனர் என வருத்தம்.! 

தான் தெருநாய்களுக்கு தினசரி சாலைகளில் சென்று பால்,பிஸ்கட் வழங்கி வரும் செயலுக்கு ஒருபுறம் பாராட்டுகளும் ஒருசிலர் ஏளனம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது என கல்லூரி மாணவி குசும் ஜெயின் கூறியுள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் தன் பெற்றோருடன் வசித்து வருபவர் குசும் ஜெயின். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை இளம் பருவத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இங்கேயே பிறந்த அவரது மூத்த மகள் குசும் ஜெயின் தற்போது நாகர்கோவிலில் உள்ள மகளிர் கல்லூரியில்
 பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

செல்ல பிராணிகள் மீது பாசமும் அக்கறையும் கொண்ட இவரது பெற்றோர் நாய்கள், பசுக்கள், பூனைகள் என பல பிராணிகள் மீது அக்கறை காட்டி உணவு வழங்கி வந்த நிலையில், அதை பின்பற்றி குசும் ஜெயினும் பிராணிகள் மீது அக்கறை காட்டத் துவங்கினார். ஆனால், பல வகைகளில் தெருநாய்கள் தான் அதிகம் சிரமப்படுவதாக எண்ணிய அவர், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது, மருந்து கொடுப்பது என சற்று வித்தியாசமான சேவையில் ஈடுபட்டு வருகிறார். 


கொரோனா முதல் அலையின்போது தெரு நாய்கள் உணவின்றி தவிப்பதை உணர்ந்து, நாகர்கோயில் நகருக்குள் வீதி வீதியாகச் சென்று உணவளித்து வந்த இவர், ஒரு கொரோனா இரண்டாவது அலையில் தனது பணியை மேலும் விரிவு படுத்தினார். இதன் விளைவாக, நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து வருவதோடு, உடல்நிலை பாதிக்கப்பட்ட நாய்களுக்கு மருந்து போட்டு தன் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இவ்வாறு செய்வதால் தெருநாய்கள் குறையாது எனவும் அந்த நாய்களால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி பலர் இந்த மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அதை பொருட்படுத்தாமல் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் வாயாக இருப்போம் அவர்களுக்கு அக்கறை காட்டுவோம் என்ற எண்ணத்தோடு தினந்தோறும் 4 மணி நேரம் செலவிட்டு தெருத்தெருவாக சென்று தனது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பால், பிஸ்கட், நாய்களுக்கான மருத்துவ உணவு  உள்ளிட்ட உணவு வகைகள் மற்றும் நோய்களுக்கான மருந்துகளை கொடுத்து வருகிறார்.

படித்து வரும் மாணவியான தங்கள் மகள் இன்னும் திருமணமாகாத நிலையில் தெருத்தெருவாக நாய்களுக்கு உணவளித்து கொண்டு நடப்பது பலரால் பல விதமாக தங்கள் காதுகளுக்கு புகாராக வரும் நிலையில், பெற்றோர் புலம்பினாலும் அவர்களையும் சமாளித்துக்கொண்டு குசும் ஜெயின் தொடர்ந்து நாய்களுக்கான தனது சேவையை தொடந்து வருகிறார். 

அவரது நற்செயலை அறிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான திரிஷ்யா, தற்போது குசும் ஜெயினோடு இணைந்து தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  குசும் ஜெயினுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட தெரியாத என்பதால் திரிஷ்யா இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து செல்லும் குசும்  ஜெயின், மேலும் உற்சாகமாக தெருத்தெருவாக உணவளித்து வருகின்றனர். ஒருபுறம் இவர்களது செயலை கண்டு சிலர் ஏளனம் பேசினாலும் பலர் இவர்களை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.