திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவி... 8 மாதமாக பெற்றோரிடமே மறைத்த அதிர்ச்சி... தற்கொலை முயற்சியில் குழந்தை பலி...

சென்னையில் திருமணத்திற்கு முன் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவி, மனஉளைச்சலில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதில், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவி... 8 மாதமாக பெற்றோரிடமே மறைத்த அதிர்ச்சி... தற்கொலை முயற்சியில் குழந்தை பலி...

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கிண்டியில் உள்ள கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ராஜேந்திரனின் மகள் வயிறு வலிப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் வெந்தயம் கலந்த  நீரை மகளுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் மாடியில் நடைப்பயிற்சி செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண், மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, மகள் ரத்த காயங்களுடன் படுகாயமுற்று கிடந்தார். அருகே தொப்பிள் கொடியுடன் இறந்த நிலையில் ஆண் குழந்தையும் கிடந்தது. 

இதைக்கண்டு அதிர்ந்த பெற்றோர், அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில்  சக மாணவர் ஒருவருடன், மாணவி காதல் வயப்பட்டதில், 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இது பெற்றோருக்கு தெரிந்தால் அவமானம் எனக் கருதிய மாணவி, பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்ததும், பின்னர் மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் மாணவியின் காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.