புனரமைக்கப்படும் சமத்துவபுரங்கள்... ஆண்டிப்பட்டியில் ஆட்சியர் ஆய்வு...

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமத்துவரபுரங்கள் சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து ஆண்டிப்பட்டி பகுதியில் சமத்துவபுரங்களில் கலெக்டர் ஆய்வு.

புனரமைக்கப்படும் சமத்துவபுரங்கள்... ஆண்டிப்பட்டியில் ஆட்சியர் ஆய்வு...
தி.மு.க ஆட்சி காலத்தின் போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அனைத்து தரப்பை சேர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த சமத்துவபுரத்தில் வீடுகளோடு, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், குடிநீர், தெருவிளக்கு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சிகாலத்தின் போது கொண்டுவரப்பட்ட சமத்துவபுரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் தி.மு. க மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சமத்துவரபுரங்கள் சீரமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் பிச்சம்பட்டி, தேக்கம்பட்டி கிராமங்களில் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்களில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
சமத்துவபுரங்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மக்களிடம் தேவைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. ஆய்வின் முடிவில் சமத்துவபுரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த மதிப்பீடு பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் சமத்துவபுரங்கள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.