கோவையில் கிராம உதவியாளர் காலில் விழ வைத்த நபர் மீது வழக்குப்பதிவு...
கோவையில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரத்தில், மனுதாரர் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் அருகே காவல்துறையினர் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி, கொத்தனார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். கொத்தனாரான அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவும் அதேபோல் நடந்து கொள்ள, அவரது மனைவி பாண்டியம்மாள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஆனந்தனை கண்டித்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்தன், போலீசார் அவமானப்படுத்தி விட்டதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
போலீசார் எச்சரித்துவிட்டுச் சென்ற நிலையில், இரவு அனைவரும் தூங்கிய பிறகு, ஆனந்தன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புறகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொதித்து வரும் நிலையில், ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், பாடி, திருமுல்லைவாயில், ஆவடி, திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக ஆவடி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. எனினும், குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், மது பழக்கத்தை கண்டித்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்த ராமுவின் மகன் தினேஷ். மதுப்பழகத்திற்கு தினேஷ் அடிமையான நிலையில், அவரை ராமு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்தவர் மது குடித்துள்ளார்.
இதை கண்டித்த தந்தை ராமுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். ராமுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மேலும் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரித்து வருகிறனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே 6-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் தேங்காய்பட்டணத்தில் இருந்து பேசுவதாகவும் 6-ம் வகுப்பு படிக்கும் 11-வயதான சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தாய் மற்றும் சிறுமியை வீட்டிலேயே வைத்து அந்த வாலிபர் மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது கணவரை பிரிந்து மகன் மகளுடன் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு செய்யதலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சேர்ந்து வாழ்வோம் என அந்த இளைஞர் கூறியதை நம்பி அந்த பெண் செய்யதலிக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்ததோடு தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் செய்யதலியின் தம்பி ரியாஸ் அவர்களுடன் இருந்த நிலையில் வீட்டில் இருந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கொடைக்கானலில் 2 ஆவது நாளாக நடந்து வரும் கோடை விழா மலர்க் கண்காட்சி சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2 ஆவது நாளாக நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் கண்களைக் கவரும் அழகிய மலர்களின் அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆறு நாட்கள் நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களைக் கொண்டு பல உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு மக்களை ஈர்த்து வருகின்றன. மனதை மயக்கும் அரிய வகை மலர்களால் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
மேலும், மலர்க்கண்காட்சி நடைபெறும் இடத்தில் மக்களை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்பட்டு அனைவருக்கும் கௌரவம் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு நிகராக உள்ளூர் வாசிகளும் பூங்காவில் மலர்க் கண்காட்சியை காண அதிக அளவில் வருகை தருவதால், பிரையண்ட் பூங்கா களை கட்டியுள்ளது.