கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கைது...!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கைது...!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஜெமினி மேம்பாலம் அருகே நேற்று நள்ளிரவு இளைஞர்கள் அதிக அளவில் ஒலி எழுப்பியும், தலைக்கவசம் எதுவும் அணியாமலும் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்தவாறு கூட்டமாக வாகனத்தில் சுற்றி திரிந்துள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் கூட்டமாக சுற்றித்திரிந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வழியாக பைக்சாகசத்தில் ஈடுப்பட்டதை இரவு ரோந்து பணியில் இருந்த ரோந்து போலீசார் கவனித்துள்ளனர். ரோந்து வாகனம் வருவதை பார்த்தவுடன் பைக் சாகசம் செய்தவர்கள் தப்ப முயன்றுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் வரை ரோந்து போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி செய்த 7 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் கிறிஸ்துமஸ் தினைத்தையொட்டி நள்ளிரவு சாந்தோம் தேவலயங்களுக்கு வந்த சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த 7 பேரையும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 7 உயர் ரக இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பைக்ரேசில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி நேற்று இரவு சென்னை முழுவதும் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சிறப்பு வாகனத்தை தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதாக 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ட்ரிபிள்ஸ் போனதாக 68 பேர் மீதும், வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் 33 பேர் மீதும், பைக்ரேசில் ஈடுப்பட்டதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : வீரம் என்றால் விவேகனந்தர்...வள்ளலார் போன்றவர்கள் என்ன கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்களா...? சீமான் கேள்வி