முகவரி இல்லாத சாலையோர கடைகளுக்கு சோட்டு, முன்னா சிலிண்டர்..தமிழ்நாட்டில் இன்று அறிமுகம்..!

2கிலோ, 5கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் இன்று முதல் விற்பனை..!

முகவரி இல்லாத சாலையோர கடைகளுக்கு சோட்டு, முன்னா சிலிண்டர்..தமிழ்நாட்டில் இன்று அறிமுகம்..!

2கிலோ, 5கிலோ கேஸ்:

தமிழகத்தில் முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் 2கிலோ, 5கிலோ கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னா, சோட்டு:

அதன்படி, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் வாயிலாக இண்டேன் நிறுவனத்தின் 2கிலோ எடை கொண்ட முன்னா சிலிண்டர் மற்றும் 5கிலோ எடை கொண்ட சோட்டு சிலிண்டர் ஆகிய இரு புதிய கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். 

சென்னையில் அறிமுகம்:

இத்திட்டத்தின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள், நடைப்பாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு இந்த புதிய வகை கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுயசேவைப் பிரிவு மையங்களில் புதிய வகை சிலிண்டர் விநியோகம் அமலுக்கு வர உள்ளது. 

விலை நிலவரம்:

இதற்கு இருப்பிடச்சான்று எதுவும் தேவைப்படாது என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னா சிலிண்டரின் விலை ரூ.961.50காசாகவும், சோட்டு சிலிண்டரின் விலை ரூ.1,528 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.