சோழர் காலத்து உலோக சிலை கண்டெடுப்பு...! சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை...!

கோவிலில் ரகசிய அலமாரியில் மறைத்து வைத்திருந்த மூன்று சோழர் காலத்து உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
சோழர் காலத்து உலோக சிலை கண்டெடுப்பு...!  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை...!
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா பண்ணை தெருவில் அமைந்துள்ள பண்ணகா பரமேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 50ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால விநாயகர் சிலை ஒன்று திருடப்பட்டுவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கோவிலில் இருந்து மேலும் 11 சிலைகள் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை வைத்து திருடுப்போன சோமஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், பிடாரி அம்மன், நவக்கிரக சிலை, நின்ற சந்திரசேகரர், நின்ற வினாயகர் சிலை உட்பட 11 சிலைகள் அமெரிக்காவின் நார்டன் சைமன் மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதே கோவிலில் உள்ள ரகசிய அலமாரியில் கணக்கில் வராத பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோவிலில் பிரகாரத்தின் அலமாரியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரகசிய அலமாரியின் பூட்டை உடைத்து மறைத்து வைத்திருந்த சோழர் காலத்தை சேர்ந்த வள்ளி, புவனேஷ்வரி, திருஞான சம்பந்தர் ஆகிய 3 பழங்கால சிலைகள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த 3 சிலைகள் எந்தெந்த கோவிலுக்கு சொந்தமானது என்றும், எப்போது கொண்டு வைக்கப்பட்டது என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ பிரெஞ்சு நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுக்குண்டான புகைப்படங்கள் உள்ளனவா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  சிலைகள் எந்தெந்த கோவிலுக்கு சொந்தமுடையது என அடையாளம் கண்டால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் எனவும் பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com