கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்... முதலமைச்சர் - இ.பி.எஸ். இடையே காரசார வாதம்... 

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே, சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்... முதலமைச்சர் - இ.பி.எஸ். இடையே காரசார வாதம்... 

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை அறிக்கை மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மீண்டும் அவை கூடியதும் பொது விவாதம் தொடங்கியது.

அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், திமுக அரசு, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதிநிலையை காரணம் காட்டி திட்டங்களை செயல்படுத்த கால தாமதத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் எழுவதாக, கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்த காரணத்தை கொண்டும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், அது சரி செய்யப்பட்ட பின் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியிலும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த ஸ்டாலின், இலவச செல்போன், பண்ணை மகளிர் குழுக்கள், பொது இடங்களில் வைபை வசதி, சென்னை மோனோ ரயில் திட்டம், போன்ற பல்வேறு வாக்குறுதிகளை சுட்டிக் காட்டினார். பயிர்க்கடன், நகைக்கடனில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். 

இதை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நீங்கள் நிலம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். 
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் என வாக்குறுதி கொடுத்து விட்டு, தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என கூறி இருப்பதாகத் தெரிவித்தார். 

இதற்குப் பதில் அளித்த, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் முதலமைச்சர் வழங்குவார் என உறுதி அளித்தார்.