அதிகாரிகளுடன் இணைந்து நிவாரண பணிகளை செய்து கொடுக்கும்படி திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செய்து கொடுக்கும்படி திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்

அதிகாரிகளுடன் இணைந்து நிவாரண பணிகளை செய்து கொடுக்கும்படி திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  அறிவுறுத்தல்

சென்னையில் நேற்றிரவும் இடைவிடாது பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுதவிர அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உதவும்படி 
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அரசு நிர்வாகம் முழு வீச்சில் பணியை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தாம் நேரில் பார்வையிட்டதாகவும்,  உரிய நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர அமைச்சர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதேபோல் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து திமுக  நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கென அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.