முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!!

தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, பிரதமர் மோடி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாஜக அல்லாத மாநிலங்கள் எரிபொருளுக்கான வாட் வரியை குறைக்கவில்லை என்றும், அதனை குறைக்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இதற்கு விளக்கம் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக குறிப்பிட்டார். ஆனால் அதற்கு ஏற்ப விலையை குறைக்காமல்,  உபரி வருவாயால் மத்திய அரசு லாபமடைந்ததாகவும், அந்த நிதியையும் முறையே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பதற்காக, எரிபொருள் விலையை குறைப்பது போல் பாசாங்கு காட்டி நாடகமாடியது மத்திய அரசு எனவும் முதல்வர் சாடினார். தேர்தலுக்கு பின்னர் எரிபொருளுக்கான விலையை மளமளவென உயர்த்தி மத்திய அரசு எரிபொருள் வரிச் சுமையை மக்கள் மீது திணித்ததாகவும்  குற்றஞ்சாட்டினார்.

ஆனால் மத்திய அரசு சொல்வதற்கு முன்னதாகவே, திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல்- டீசலுக்கான எரிபொருள் விலையை தமிழக அரசு குறைத்து   நடைமுறைப்படுத்தி காட்டியதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் முதல்வரின் உரையை தொடர்ந்து பேசிய  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதாக தெரிவித்தார்.  இந்த வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் 2019-20ல், 2 லட்சத்து 39 கோடி ரூபாயாக மத்திய அரசுக்கு கிடைத்த வரிவருவாய், 2020-21ல் 3 லட்சத்து 89 கோடி ரூபாயாக அதிகரித்தும், தமிழ்நாட்டிற்கு குறைவாகவே வரிவருவாய் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

அதுதவிர கருணாநிதி  ஆட்சியில் 3 முறையும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும் என மொத்தம் 4 முறை வாட் வரி குறைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பழனிவேல் தியாகராஜன்,  ஆனால் இதற்கு நேர்மறையாக பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 7 ஆண்டுகளாக பெட்ரோல் மீதான வரிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சாடினார். எனவே இந்த வரி உயர்வை குறைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் எனவும் பேரவையில் வலியுறுத்தினார்.