டெல்லியில் 17 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

வரும் 17 ஆம் தேதி  டெல்லி  செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து  வலியுறுத்த உள்ளார்.

டெல்லியில் 17 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று  ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. புதிதாக பதவி ஏற்கும் மாநில முதலமைச்சர்கள் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதுடன் தங்கள் மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து  மனு அளிப்பது வழக்கம்.

ஆனால் முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று  ஏறக்குறைய 37 நாட்கள் கடந்து விட்டது.  எனினும் பிரதமரை சந்திக்க முடியாத சூழலுக்கு ஆளானார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில்  முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தியதே டெல்லி பயணம் தள்ளிப்போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் டெல்லி பயண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 17 ஆம் தேதி  காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நண்பகலில் டெல்லி சென்றடையும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக மக்களவை மற்றும்  மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர். 

அங்கிருந்து சாணக்கிய புரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக காவல்துறை சார்ப்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.

பின்னர், மாலை 5 மணிக்கு லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடியை  நேரில் சந்தித்து பேசுகிறார். சந்திப்புக்கு பின்பு டெல்லி ITO பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை  மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். 

18 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்திற்கு  செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை மரியாதை நியமித்தமாக  சந்திக்கிறார்.நண்பகலில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் பிற்பகல் அல்லது மாலை தமிழ்நாடு புறப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது..