"389 நடமாடும் மருத்துவமனை".. வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வசதி - முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கிராமம் தோறும் சென்று மருத்துவ சேவை வழங்கும் விதமாக, 389 நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

"389 நடமாடும் மருத்துவமனை".. வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வசதி - முதல்வர் தொடங்கி வைத்தார்

கிராமங்கள் தோறும் மக்களுக்கு மருத்துவ வசதிகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், ‘நடமாடும் மருத்துவமனை' என்ற பெயரில் மருத்துவ வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவப் பணியாளருடன், ஆய்வக வசதியும் கொண்ட இவ்வாகனத்தில் இரத்தம், சளி, சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான வசதியும் உள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், காச நோய், நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சை உட்பட அனைத்து வகை நோய்களுக்குமான அடிப்படை சிகிச்சைகளை வழங்கும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய நலவாழ்வு குழும நிதியில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் நடமாடும் மருத்துவமனைக்கான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் தலா ஒரு மருத்துவ வாகனம் வழங்கப்பட உள்ள நிலையில், 389 மருத்துவ வாகனங்களின் செயல்பாட்டை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக, சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 133 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.