தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம் - ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தின் கல்வியறிவு விகிதம், தேசிய கல்வியறிவு சராசரியைவிட அதிகமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம் - ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் பெருமிதம்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில், பிரிவு வாரியாக என்னென்ன பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன?, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன. வரும் 29ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள இந்த ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியினை, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

அப்போது பேசிய முதலமைச்சர், விரல் நுனியில் உலகம் வந்துவிட்டது, இந்த காலத்து பிள்ளைகள் மிகவும் விவரமானவர்கள் எனப் பாராட்டினார். மாணவர்கள் தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்து எனக் கூறிய அவர், பள்ளிப்படிப்பை முடித்தோம், கல்லூரியில் சேர்ந்தோம், பட்டம் வாங்கினோம், சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், எப்படிப்பட்ட ஆற்றலை நீங்கள் பெற்றீர்கள்? அந்த ஆற்றலின் மூலம் சமூகத்தை எப்படி மாற்றினீர்கள் என்பதுதான் முக்கியம் என அறிவுரை வழங்கினார்.

அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும், மிகச்சிறந்த உயரத்தை அடையலாம் எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம் எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழகத்தில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கை அளவிற்கு, வேறு எந்த மாநிலத்திலும் இல்லை எனக் கூறிய முதலமைச்சர், பொறியியல், மருத்துவத்தோடு நின்று விடாமல், அனைத்து துறைகளிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அந்தந்த துறையில் சிறந்து விளங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.