வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த  நிலையில், அணைகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை பார்வையிட உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். எனவே இந்த முறை கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது.  அதுமட்டுமின்றி, இந்த ஆய்வின் போது, நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் மற்றும் கரைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பருவ மழைக்கு முன்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் வெள்ள தடுப்பு தளவாடங்களின் இருப்பு ஆகியவற்றையும், நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பதையும் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.