
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிந்ததது. மேலும், தொற்று பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில், கவிதா, புவனா என்ற 2 பெண் சிங்கங்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.
அவைகளை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கங்களை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக, மருத்துவ குழுவினர் மிகுந்த எச்சரிக்கையோடு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி கார் மூலம் வலம் வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை பார்வையிட்டார். மேலும், சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு முறைகள் மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்தும் பணிகள் குறித்து, மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.