+2 மதிப்பெண் வழங்கும் முறையை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் வழங்கும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

+2 மதிப்பெண் வழங்கும் முறையை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் நடைபெறவிருந்த +2 மாணவர்களுக்கான  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, மாணவர்களுக்கான மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. 

இந்நிலையில், தற்போது, +2 மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 50 சதவீதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பில் எழுத்து முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 20 சதவீதமாகவும், 12-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 சதவீதமாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  12-ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திற்கான செய்முறை தேர்வுக்கான 20 மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 30 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முழுவதுமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில்  பெற்ற மதிப்பெண்கள் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தாலோ அவர்களுக்கு 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

11 மற்றும் 12-ஆம் வகுப்பு எழுத்து தேர்வு, அகமதிப்பீடு, செய்முறைத்தேர்வு என தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட பங்கேற்காத மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் சீரடைந்த உடன் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.