”இசைஞானி” இளையராஜாவின் 80வது பிறந்த நாள்...நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!

”இசைஞானி” இளையராஜாவின் 80வது பிறந்த நாள்...நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!

இசையுலகை ஆண்டு வரும் இளையராஜா இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

’இசைஞானி இளையராஜா’ இவரின் இசையில் மயங்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா?. தன்னுடைய இசையால் ரசிகர்களை கனவுலகத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர் தான் இளையராஜா. தமிழ்த்துறையில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இளையராஜாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

இதையும் படிக்க : ”கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல, கடுந்தன்மை” கொந்தளித்த அன்புமணி !

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.  எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! " இவ்வாறு தனது பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.