10.5 சதவீதம் உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு..?  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம், இன்று முடிவு எடுக்கிறது.

10.5 சதவீதம் உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு..?  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, எந்த தடையும் இல்லை என, தெரிவித்தது. அதன் அடிப்படையில், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்,  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில், நியமனங்கள் நடந்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில்,'அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று, வாதிடப்பட்டது. இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இன்று முன்வைக்க, இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போது, இடைக்கால உத்தரவு குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.