சென்னை சேப்பாக்கம்....உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்க தடைக்கோரி மனு.....!! 

சென்னை சேப்பாக்கம்....உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்க தடைக்கோரி மனு.....!! 
Published on
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய மனு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண சென்றபோது,  40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமா சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை என்றும், குடிநீர் 100 மில்லி லிட்டர் 10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும், குளிர் பானங்கள் 50 முதல் 100 ரூபாய்க்கும், சமோசா 50 முதல் 80 ரூபாய்க்கும், சாம்பார் மற்றும் தயிர் சாதம் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளின் போது கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் மார்ச் 23ல் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது சட்டவிரோதமானது என கூறினார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தரப்பு வழக்கறிஞர், மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் , பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவு பொருட்கள் வழங்கினால் மைதானத்திற்குள் வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ப்ளாஸ்டிக்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தார். 

இதனையடுத்து மனு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் பிசிசிஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com