
சென்னை மாநகர பேருந்துகளின் தகவல்களை மட்டுமே வழங்கி கொண்டிருந்த சென்னை பஸ் செயலி மூலம் இனி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் வழித்தடம் குறித்தும் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிந்துகொள்ள கடந்த மே மாதம் சென்னை பஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் சென்னை மாநகரப் பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை செல்போன் வழியாக பொது மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் மூலம் பேருந்துகள் எந்த இடத்தில் இருக்கின்றன. அடுத்து எங்கு வரவுள்ளன போன்ற தகவல்கள் எளிதில் கிடைப்பதால் மக்களிடையே சென்னை பஸ் செயலி வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் வரும் இடம், நேரம் குறித்து அறிந்துகொள்ளும் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவு போக்குவரத்துக்கு கழகத்தை பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினம்தோறும் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவிகள் உதவியோடு டிக்கெட் முன்பதிவுசெய்த பயணிகள் பேருந்து வரும் நேரம் மற்றும் இடம் குறித்து அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன்முலம் தொலைதூர மாவட்டங்களுக்கு இரவில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி செல்லமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள சேவையில் உள்ள குறைபாடுகள் முழுவதுமாக சரி செய்யப்பட்டு பொங்கலுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.