லட்சகணக்கான பக்தர்களுக்கு நடுவே ஒய்யாரமாய் தேரில் ஊர்வலம் வந்தார் மதுரை கள்ளழகர்...!

லட்சகணக்கான  பக்தர்களுக்கு நடுவே ஒய்யாரமாய் தேரில் ஊர்வலம் வந்தார் மதுரை கள்ளழகர்...!

ஆடி பிரம்மோற்சவத்தையொட்டி மதுரை கள்ளழகர் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

ஆடி பிரம்மோற்சவ திருவிழா:

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கடந்த நான்காம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூத வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற  மதுரை கள்ளழகர் திருக்கோயி தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் படி பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

மதுரை கள்ளழகர் திருக்கோயில் தேரோட்டம்:

கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவின் ஒன்பதாம் நாள், இன்று திருத்தேரோட்டத்தையொட்டி திருத்தேரில் கள்ளழகர் பெருமாள், பூதேவியுடன் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

லட்சக்கணக்கான பக்தர்கள்:

தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளதால் திரும்பும் திசையெல்லாம் பக்தர்களே காட்சியளிக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே தேர் ஆடி அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. இதன் பிறகு கள்ளழகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன.