சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: விடுமுறை தினங்களில் இயங்குமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: விடுமுறை தினங்களில் இயங்குமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியதைத் தொடா்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. நோய்த் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

மெட்ரோ ரயில் சேவையை பொருத்தவரை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.