மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதன் பின் வலுப்பெறும் புயல் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்திலும் இயல்பை விட மழை அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம்  நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.