தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: மைலாடியில் 24 செ.மீ மழைப்பதிவு...

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:  மைலாடியில் 24 செ.மீ மழைப்பதிவு...

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 

நாளை தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

30ஆம் தேதி அன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 24 செண்டி மீட்டர் இரணியலில் 19 செண்டி மீட்டர், கொட்டாரத்தில் 17 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.