தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு...

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு  மிக முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு...

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்பதால்,இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடலூர், விழுப்புரம்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 

நவம்பர் ஒன்றாம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நவம்பர் 2 முதல் 3ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.