தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழையும்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என கணித்துள்ளது.

இதைப்போல நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

தமிழக  கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.