தேசிய சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம்... வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள்...

தேசிய சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய மூன்று வீரர்களுக்கு பொன்னேரியில் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தேசிய சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம்... வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 12வது தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள் நான்கு நாட்களாக நடைபெற்றது.நாடு முழுவதுமிருந்து 22 மாநிலங்களை சேர்ந்த எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் ஆண்கள் 18 பேர் பெண்கள் 14 பேர் என 32 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வரும் கலைமுதுமணி சுப்ரமணிய ஆசான் சிலம்பக்கூட வீரர்கள் மூன்று பேர் பங்கேற்றனர்.

ஜூனியர் பிரிவில் பங்கேற்ற புவனேஸ்வரி, மோகன் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி அபாரமாக விளையாடி தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதேபோல சப்ஜூனியர் பிரிவில் பங்கேற்ற மிதுன் அசத்தலாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு பொன்னேரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் நேரில் வந்து சாதனை படைத்த மூவருக்கும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் நகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.சாம்பியன் பட்டம் வென்ற புவனேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டவர் கடந்த ஏழாண்டுகளாக பொன்னேரி அரசினர் மேனிலைப் பள்ளியில் சிலம்ப பயிற்சி எடுத்து வந்த நிலையில் தற்போது அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிலம்ப விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த பள்ளியில் சிலம்ப வீரர்கள் தொடந்து பயிற்சி மேற்கொள்ள உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.