தமிழகத்தில் முதல் முறையாக செந்தூரப் பூ மரக்கன்று அறிமுகம்!!

திருச்சியில், செந்தூரப்பூ மரக்கன்றுகளை  அறிமுகம் செய்து வைத்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் முதல் முறையாக செந்தூரப் பூ மரக்கன்று அறிமுகம்!!

வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செந்தூரப் பூ மரங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் செந்தூரப் பூ மரம் மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே உள்ளன. இதனை அறிந்த சத்தீஷ்கர் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் பிரசன்னா, தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, விதைகள் மூலம் தமிழகத்தில் செந்தூரப்பூ மரக்கன்றுகளை வளர்க்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் செந்தூரப் பூ மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக, செந்தூரப் பூ மரக்கன்றுகள் நடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் கலந்து கொண்டு, செந்தூரப் பூ மரக்கன்றுகளை அறிமுகம் செய்து வைத்து, நட்டு வைத்தார். செந்தூரப்பூ,செங்காந்தள் மலர்,நொச்சி, மனோகரஞ்சிதம் போன்ற மலர்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் 33 சதவீதம் மரங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் தமது இலக்கு என்று கூறிய ஆட்சியர், இதற்காக இன்னும் ஒரு கோடி மரங்கள் நடவேண்டிய உள்ளது என்றும் கூறினார்.