காவேரி கூட்டு குடிநீர்  வினியோகம் நிறுத்தம் : காலிக்குடங்களுன் ஒப்பாரி வைத்து போராட்டம் !!

குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து, சங்கு ஊதி, முக்காடு அணிந்து பெண்கள் காலி குடங்களுடன், ஒப்பாரி வைத்து நூதன போரட்டம்.

காவேரி கூட்டு குடிநீர்  வினியோகம் நிறுத்தம் : காலிக்குடங்களுன் ஒப்பாரி வைத்து போராட்டம் !!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பாப்பாங்குளம் கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக காவேரி கூட்டு குடிநீர்  வினியோகம் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தபட்டுள்ளதால் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாப்பாகுளம் கிராமத்தில் இருந்து பெண்கள், சிறுவர்கள் கடலாடிக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில்  சென்று குடிநீர் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பாப்பங்குளம் கிராம பெண்கள் காவேரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டம்  நடத்தினர்.  இரண்டு மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வராத தண்ணீர் தொட்டிக்கு பூ மாலை அணிவித்து, பெண்கள் தலையில் முக்காடு அணிந்து, சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து, காலி குடங்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாப்பாகுளம் கிராம பெண்கள் கூறுகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு  மேலாக முன்னறிவிப்பின்றி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலாடி ஆட்டோவில் சென்று ஒரு குடம் 10ரூ க்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது என்றனர்.