அனுமதியின்றி நடத்திய மெழுகுவர்த்தி பேரணி...அண்ணாமலை உள்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

அனுமதியின்றி நடத்திய மெழுகுவர்த்தி பேரணி...அண்ணாமலை உள்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கிருஷ்ணகிரியில் ராணுவவீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்றைய தினம்  தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை குற்றவாளியின் கைகளில் போடப்படும் விலங்கு, போலீசாரின் கைகளில் போடப்பட்டுள்ளதாகவும், இராணுவ வீரர்களை ஒரு சில அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

இதையும் படிக்க : தேர்தல் விதிமுறைகளை மீறியதா திமுக கூட்டணி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இதைத்தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்ற அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் புகார் மனுவை அளித்தார். தொடர்ந்து, இன்று காலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணாமலை சந்திப்பதாக கூறப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி பேரணி நடத்தியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும், அவருடன் நேற்று பேரணியில் பங்கேற்ற 3500 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.