பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டுமென்ற சஸ்பெண்ட் செய்யபட்ட சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழ்க்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு:  3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் , பெண் எஸ்.பி.யை  சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட உட்புகார் விசாரணைக் குழு எனப்படும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தம்  மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில்தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.