சிறுவர் ஆபாச படங்களை பகிர்ந்த 50க்கும் மேற்பட்ட குழுக்கள்...

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்தவர்கள் மற்றும் ஆன்லைனில் பகிர்ந்தவர்கள் தொடர்பாக தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் 76 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர் ஆபாச படங்களை பகிர்ந்த 50க்கும் மேற்பட்ட குழுக்கள்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஆபாசப் படங்கள், பார்ப்பது, பகிர்வது, வைத்திருப்பது உள்ளிட்டவையும் குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டு இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை பதிவேற்றியதாக ஒரு கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

அதேபோல சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்தது மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தொடர்பாக பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு என தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு குழந்தைகளின் ஆபாசப் படங்களை அதிக அளவில் பார்த்து, பகிர்பவர்கள் தொடர்பான விபரங்கள் ஐ.பி அட்ரஸ் மூலம் பட்டியலிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் மாஃபியா கும்பல்கள் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்தும் செயல்பட்டு வந்ததன் காரணமாக இவ்விவகாரம் தொடர்பான விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு இது தொடர்பாக டெல்லி, பிஹார், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 86 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து அதில் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பவர்கள், பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தொடர்பாக கிடைத்த பல்வேறு துப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 76 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இந்த சோதனையை சி.பி. ஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனையில் கிடைக்கப்பெறும் ஆவணங்கள் மூலம் இவ்விவகாரத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது எவ்வாறு இந்த மாஃபியா கும்பல் செயல்படுகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் தெரியவர வாய்ப்புள்ளதாகவும், மாஃபியா கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சி.பி.ஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6 இடங்களில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்களை மட்டும் வெளியிடுவதாக கண்டறிந்துள்ளனர். இதில் சில குழுக்கள் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குழுக்கள் வெளிநாட்டவர் தொடர்புடையவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகவும் தெரிய வந்துள்ளது. சிபிஐ பல்வேறு விதமான விசாரணை அமைப்புகளுடன் இணைந்து, பல்வேறு முறையில் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.