தமிழகத்தில் இன்று தொடங்குகிறது பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 600 மையங்களில் ஏற்பாடு

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கப்படுகிறது. இதற்காக சென்னை உட்பட, மாநிலம் முழுவதும் 600 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில்  இன்று தொடங்குகிறது பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 600 மையங்களில் ஏற்பாடு

உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகளவில் பல்வேறு நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவல் தீவிரமாகப் பரவி வருகிறது.

இதற்கிடையே, இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை என்ற பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போல, வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில், முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.