யானை வழித்தடங்கள் அடைப்பு ; ஈஷா யோகா மையத்தின் மீது மனு தாக்கல்...!

யானை வழித்தடங்கள் அடைப்பு ; ஈஷா யோகா மையத்தின் மீது மனு தாக்கல்...!

ஈஷா யோகா மையத்தால் யானைகளின் வழித்தடங்கள் அடைக்கப்படுள்ளதாக வனவிலங்கு பாதுகப்பு ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா யோகா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர், தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள அந்த மனுவில், ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடம் உள்ளதாகவும், யானைகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 150 க்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாகவும், யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சிவராத்திரி இரவுகளில், டிஸ்கோ நடனம் நடத்துவதுடன், அதிக டெசிபல் ஒலி ஏற்படுத்துவதால், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 28 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க : 9 வருடங்களுக்கு முன்பு செய்த சம்பவம் ...வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்...