தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கோடை மழை...!!

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கோடை மழை...!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கோடை மழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டொித்து வரும் நிலையில் பொதுமக்கள் பொிதும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில் பல்வேறு பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், அண்ணாநகர், பர்மாகாலனி உள்ளிட்ட நகர் பகுதியில் மட்டும் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதையடுத்து பலத்த இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காவேரிம்மாபட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக மக்காச்சோளப் பயிர்கள் வேறோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  அதிகளவிலான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில்  சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com