தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கன மழை... மரங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி...

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில், நேற்று கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கன மழை... மரங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி...

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மாவட்டங்களில், இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், நேற்று மாலை நாகை டவுன், நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழ்வேளூர், கீழையூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.  

சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளாப்பூர், கிருங்காகோட்டை, பிரான்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. கடந்த ஒரு மாதங்களுக்கு பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டாலும், கடலை பயிர் செய்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  

கரூர் நகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக, குளிர் காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால், ஆசாத் சாலை, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரியில் உப்பளம், உருளையான்பேட்டை, முத்தியால்பேட்டை மற்றும் கடற்கரை பகுதிகளிலும், திருக்கனூர், மதகடிப்பட்டு, காலப்பட்டு, அரியாங்குப்பம், கன்னியக்கோயில் ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. எனினும் மழையில் நனைந்தபடியே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.