துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா.. அதிமுக திடீரென வெளிநடப்பு!!

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா.. அதிமுக திடீரென வெளிநடப்பு!!

மாநில பல்கலைக்கழகங்களில், தமிழக அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர்,  குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் அம்மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவிலும் மாநில அரசின் ஒப்புதல் பெற்று துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

முன்னதாக ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா கொண்டு வந்து அதனை அவர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததையும் பொன்முடி குறிப்பிட்டு பேசினார்.

இதனைத்தொடர்ந்து மசோதாவுக்கு ஆதரவாக திமுக எம். எல்.ஏக்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வாக்களித்தனர். திமுக கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இது தொடர்பான விவாதம் நடைபெற்றபோது,  மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக. எம். எல்.ஏ கே.பி. அன்பழகன் மற்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் விவாதம் தொடர்ந்ததால் பாஜக எம். எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். காராசார விவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம். எல்.ஏக்களும் அமைச்சர் பெரிய கருப்பனை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.