
வரும் குளிர்கால கூட்டத்தொடரில், எல்லை வரையறுப்பது, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபதாரத்துடன் கூடிய சிறை தண்டனை விதிப்பது, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களிடம் அனுமதி சீட்டு கட்டணம் வசூலிப்பது, பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற சட்டங்கள் இயற்றப்படவுள்ளன. சுதந்திரமான மீன் பிடிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா இயற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கருப்புக் கொடி கட்டி, ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் துறைமுகம் நோக்கி கருப்பு கொடியுடன் பேரணியாக சென்று, கடலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது இலங்கை அரசுடன் இணக்கம் காட்டும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டி கோஷங்களையும் எழுப்பினர்.