பொதுமக்கள் இதனை தவிர்க்க வேண்டும்.. தீபாவளியை முன்னிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

பொதுமக்கள் இதனை தவிர்க்க வேண்டும்.. தீபாவளியை முன்னிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

பொதுமக்கள் பாதுகாப்புடனும் ஒலி மாசற்ற வகையிலும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு வலியுறுத்தல்கள்

தீபாவளித் திருநாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பண்டிகையைக் கொண்டாடுவது குறித்த பல்வேறு வலியுறுத்தல்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

பசுமைப் பட்டாசுகள்

அதன்படி, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்தளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி பட்டாசு வெடிக்க அப்பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை தவிர்க்க வேண்டும்

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள். வழிபாட்டுத் தளங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நிலையில், மாசற்ற வகையிலும் பாதுகாப்பாகவும் பண்டிகையைக் கொண்டாடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாசற்ற பண்டிகை

காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாசற்ற பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.