சென்னையில் கடற்கரை செல்ல தடை...  சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு...

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடற்கரை செல்ல தடை...  சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு...

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான  குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக அளவு பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.  

இன்று ஆடி அமாவாசை என்பதால், கோயிலுக்கு செல்வதற்காகவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவோ, சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல், எண்ணூர் வரையிலான கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.