ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜர்...

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது  ஏன்? பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜர்...

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன், அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், ஜூன் 8ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், சமீபத்தில் ராஜகோபாலன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதற்கிடையில், ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்த விசாரனைக்கு ஆஜராகுமாறு, பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகிருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இன்று ஆஜரான அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்ட போதும், நடவடிக்கை எடுக்காதது குறித்து பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.