நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் மதுபான கொள்கை, மதுபான விற்பனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பேட்டி அளித்திருந்தார். மேலும் பல்வேறு ட்விட்டர் பதிவுகளையும் பதிவு செய்திருந்தார்.
இதற்காக இரண்டு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடுக்கோரியும், தம்மை குறித்து அவதூறாக பேச, நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரியும் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 17ம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல் குமாருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த கூடுதல் மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதால், நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.