குடும்ப ஆட்சியை பா.ஜ.க. எதிர்க்கிறது : சசிகலா புஷ்பா பேச்சு !!

பாஜக குடும்ப ஆட்சியை எதிர்க்கிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூடட்த்தில் சசிகலா புஷ்பா பேசியுள்ளார்.

குடும்ப ஆட்சியை பா.ஜ.க. எதிர்க்கிறது : சசிகலா புஷ்பா பேச்சு !!

தூத்துக்குடியில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் பாஜக மாநில பிரச்சார பிரிவு சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி திடலில் நடைபெற்றது. பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. இந்த தெருமுனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தொடக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், நமது நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்திய நாளான ஜூன் 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாட்டில் எந்தவித போர் ஏற்பட்டதில்லை,உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. 

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனால் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவில்லை. மாறாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது குடும்பத்திற்கு நலனுக்காக அவசர நிலையை கொண்டு வந்தார். இதன் காரணமாக அன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எனவே குடும்ப ஆட்சியால் என்ன நிலை ஏற்படும் என்பதை நாங்கள் ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி வருகிறோம்.

பாஜகவை பொறுத்தவரை குடும்ப ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனை மறுக்கிறோம், எதிர்க்கிறோம். கர்மவீரர் காமராஜர் இறப்புக்கு இந்த அவசர நிலை பிரகடனம் தான் காரணமாக அமைந்தது என சுட்டிக்காட்டிய அவர், திமுகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் பல நிறுவனங்களில் கனிமொழி பங்குதாரராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி நாட்டின் நலனுக்காகவே எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பாஜக ஆட்சியில் ராணுவத்தில் அதிக புரட்சி ஏற்பட்டுள்ளது. சீனா நாட்டின் எல்லையை கூட நாம் தான் கையகப்படுத்தி இருக்கிறோம்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக ஏன் நீரை சேமிக்க ஒரு அணை கூட கட்டவில்லை? நீர்நிலைகளை பாதுகாக்க முடியவில்லை என கேள்வி எழுப்பி அவர், மத்திய அரசு ஜிஎஸ்டி, டிஜிட்டல் மயம் போன்றவற்றை கொண்டு வந்ததன் காரணமாக நாட்டில் ஊழல் குறைந்துள்ளது என்றார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார் நாட்டில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமையும். பாஜக தொடர்ந்து தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும். மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி பாஜக என்று அவர் கூறினார்.

பாஜக பிரச்சார பிரிவு மாநில செயலாளர் விக்னேஷ்,மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் மகேஸ்வரன், முன்னாள்  தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர்.கனகராஜ்,மாவட்ட துணைத் தலைவர் வாரியார் மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள்,150வது கிளை தலைவர் கணேசன்,மாவட்ட துணைத் தலைவர் சுவைதர் உள்ளிட்டவர்கள கலந்து கொண்டனர்.