ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!

ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!

பாஜகவில் இருந்து சில நிர்வாகிகள், எடப்பாடியை நேரடியாக சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பிளவு:

அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் எழுந்த ஒற்றைத்தலைமை கோஷத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மாறி மாறி வரும் தீர்ப்பு:

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ், கட்சியில் இருந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார். இப்படி மாறி மாறி ஒருவரையொருவர் நீக்கி வந்தனர். இதனிடையே பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமும் மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது. தற்போது, இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேர்தலில் தீவிரம் காட்டும் பாஜக:

இப்படி அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை விவகாரம் அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடமும் மெளனம் காத்து வருகிறது. ஆனால், அதிமுகவை பொறுத்தமட்டில் ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் இணைந்து இருப்பதை தான்  பாஜக பலம் என்று கருதுகிறது. இதனிடையே, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக திட்டம் தீட்டி அதற்கு உரிய வேலைகளில்  தீவிரம் காட்டி வருகிறது. 

எதையும் கண்டுகொள்ளாத ஈபிஎஸ்:

இந்நிலையில், ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால், பாஜக மேலிடம் அப்செட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இவர்களின் பிரிவு எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,  திமுகவுக்கு சாதகமாக அமைந்து விடும் என்று பாஜக மேலிடம் எச்சரித்தும், எதையும் கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

ஈபிஎஸ்சை சந்தித்த பாஜக நிர்வாகிகள்:

இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சார்பில் சிலர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவர்களிடம் பேசிய எடப்பாடி, "எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு வராத நெருக்கடியா... எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்.." என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மறைமுகமாக எச்சரித்த பாஜக:

இதைக் கேட்டு ஷாக் ஆன பாஜக நிர்வாகிகள், 'எம்ஜிஆர் - ஜெயலலிதா செல்வாக்கு மிக்க தலைவர்கள். அவர்கள் போல் நினைத்து முடிவெடுத்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்' என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : "சல்லியர்கள்" படத்தின் இசை வெளியிட்டு விழா...இயக்குனர் வெற்றிமாறன் விமர்சனம் ..