"ஆம்பர் கிரீஸ்"-ஐ கடத்த முயற்சித்த வாலிபர்கள்...மடக்கி பிடித்த போலீசார்!

"ஆம்பர் கிரீஸ்"-ஐ கடத்த முயற்சித்த வாலிபர்கள்...மடக்கி பிடித்த போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டம்  குளச்சலில்  சட்டவிரோதமாக திமிங்கல உமிழை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருள் விற்பதை கண்காணிக்க தனிப்படை:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கவும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, அந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தனிப்படைக்கு ரகசிய தகவல்:

தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசாருக்கு, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய விற்பனைக்கு தடை செய்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் ஆன "ஆம்பர் கிரீஸ்" என்ற பொருளை காரில் கடத்தி சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருவதாக  ரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணை:

ரகசிய தகவலையடுத்து, தனிப்படை போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வந்த 5-வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில், 5-வாலிபர்களையும், சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், வாலிபர்கள் 5-பேரும் தடை செய்யப்பட்ட, சர்வதேச சந்தையில் சுமார் 12 கோடி ரூபாய் வரை விலை போகும், 12-கிலோ திமிங்கல உமிழ்நீர் "ஆம்பர் கிரீஸ்" ஐ சொகுசு காரில் பதுக்கி கேரளாவிற்கு கடத்தி சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.

வாலிபர்களை கைது செய்த போலீசார்:

விசாரணையில் வெளியான தகவலின்படி, குற்றவாளியான வாலிபர்கள் 5-பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 12-கோடி ரூபாய் மதிப்பிலான 12-கிலோ ஆம்பர் கிரீஸ் உள்பட, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 5-செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அதிகாரி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வனத்துறை அதிகாரி விஜயகுமார்:

இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரி விஜயகுமார், மீனவர்கள் தங்கள் வலையில் சிக்கும் திமிங்கல உமிழ்நீர் ஆம்பர் கிரீஸ் ஐ 48-மணி நேரத்தில் வனத்துறையிடமோ அல்லது கடல் காவல் நிலையத்திலோ ஒப்படைக்க வேண்டும் என்றும், தடையை மீறி விற்பனையில் ஈடுபட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.