மரக்கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சி.....தடுக்க முயன்ற காவலாளி குத்தி கொலை....பல்லடம் அருகே பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மரக்கடைக்குள் புகுந்த கொள்ளையடிக்க முயன்ற நபரை, தடுக்க சென்ற காவலாளியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரக்கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சி.....தடுக்க முயன்ற காவலாளி குத்தி கொலை....பல்லடம் அருகே பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேரன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இரவு காவலாளியாக வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

கடந்த 3ம் தேதி வியாபாரம் முடித்துவிட்டு, இரவு வழக்கம் போல் மரக்கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார் ராஜேந்திரன். கடையில் வாயிலில் காவலாளி சுப்பிரமணி உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் கடைக்கு வந்த இரண்டு கொள்ளையர்கள் மரக்கடைக்குள் புகுந்து கல்லாவில் இருந்த 1,500 ரூபாய் பணம்,மற்றும் காவலாளி சுப்பிரமணியை மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த 2,000 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு சென்றனர்.

சிறிது நேரம் கழித்து தப்பியோடிய கொள்ளையர்களில் ஒருவன் மீண்டும் மரக்கடை அருகே வந்துள்ளான். அவனை கண்ட காவலாளி சுப்பிரமணி திருடியது நீ தானே என்று அவனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் கடைக்குள் செல்ல முயன்ற திருடனை காவலாளி சுப்பிரமணி பிடிக்க முயற்சி செய்துள்ளார்.அப்பொழுது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த திருடன் சுப்பிரமனயின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதில் காவலாளி சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது குறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மரக்கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்கள் கைப்பற்றி தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.