
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த ரோஸ் நாகராஜன் என்பவர், ஒன்றிய செயலாளருக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது, அங்கிருந்த திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் அவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். அந்த தள்ளுமுள்ளில் நாகராஜன் சட்டை கிழிந்ததோடு, லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.