நில அபகரிப்புக்கு துணை போன பதிவாளர் : நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு. உயர்நீதிமன்றம் கண்டனம் !!

நில அபகரிப்புக்கு துணை போனதாக மாவட்ட பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான புகார் மீது ஓராண்டாக நடவடிக்கை எடுக்காத பதிவுத் துறை ஐ.ஜி.,க்கு  சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நில அபகரிப்புக்கு துணை போன பதிவாளர் : நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு. உயர்நீதிமன்றம் கண்டனம் !!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்பவர், குமாரபாளையம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை  போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அபகரித்துள்ளதாகவும், அதற்கு  கோவை மாவட்ட பதிவாளர் சுரேஷ்குமார், சார் பதிவாளர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதாக கூறி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு கடந்த ஆண்டு புகார் அனுப்பியிருந்தார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, நாராயணசாமி கொடுத்த புகாரை கடந்த ஆண்டு மே மாதம் பதிவுத் துறை ஐ.ஜி. ,க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, போலி வாரிசு சான்றிதழ்  நிலத்தை  அபகரிக்க உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல், நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டி அரசுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய்  இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமான புகார் மீது ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாக பதிவுத்துறை ஐ.ஜி.க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து ஜூலை 7ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.