”மாநில அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”மாநில அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on

டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

டெல்லி அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்த நிலையில், அவசர சட்டம் கொண்டுவர ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதனிடையே சட்டத்திற்கு எதிராக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆதரவை டெல்லி முதலமைச்சர் திரட்டி வருகிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் எனவும், அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி தலைவர்களும், அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஆதரவு தர வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஜூன் 12ஆம் தேதி பீகாரில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறிய முதலமைச்சர், மாற்று தேதியில் கூட்டம் நடத்தும்படி கேட்டு கொண்டதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி செல்லும் போதெல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் மாடல் பள்ளி திட்டத்தை அறிந்து தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என கருதி, ஆய்வு செய்ததாக தெரிவித்தார். மேலும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறினார். 

இதனை தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு அரசு டெல்லி மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் டெல்லி மக்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதனை நிராகரிக்கும் அளவிற்கு பாஜக அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மக்களவையில் பாஜக பலமாக இருந்தாலும் மாநிலங்களைவையில் பாஜக விட எதிர்கட்சிகள் பலமாக உள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருவதாகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது எனவும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com