அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு : ஆய்வாளர் பணியிடை நீக்கம் !!

நகைகளை கொள்ளையடித்தவுடன் சந்தோஷ் அவரது மனைவி ஜெயந்தி மூலமாக காவல் ஆய்வாளரின் மனைவி மெர்ஸியிடம் வழங்கி மறைத்து வைத்திருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. 

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு : ஆய்வாளர் பணியிடை நீக்கம் !!

வங்கிக் கொள்ளை

அரும்பாக்கம் தனியார் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட  வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, செந்தில்குமரன், சந்தோஷ், பாலாஜி ஆகியோரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நரத்தி வருகின்றனர்.

நகைகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து சுமார் 30 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்  மீதமுள்ள நகைகளை மீட்க கொள்ளையர்களுடன் தொடர்புடைய கோயம்புத்தூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் உறவினர்களான ஸ்ரீவட்சன், ஸ்ரீராம் உட்பட 6 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நகைகளை மறைத்து வைத்த ஆய்வாளர்

இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.7கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில் மேல்மருவத்தூரில் உள்ள காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வீட்டில் மறைத்து வைத்திருந்த காரணத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸி இந்திரா ஆகியோரை தனிப்படை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

உறவினர்

விசாரணையில் அச்சிரப்பாக்கம்  ஆய்வாளரின் மனைவி மெர்ஸியும், கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பது தெரியவவந்தது. மேலும், நகைகளை கொள்ளையடித்தவுடன் சந்தோஷ் அவரது மனைவி ஜெயந்தி மூலமாக காவல் ஆய்வாளரின் மனைவி மெர்ஸியிடம் வழங்கி மறைத்து வைத்திருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. 

பணியிடை நீக்கம்

இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த காரணத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.